தமிழர் பாரம்பரியம் கலைகள்


கோலட்டாம்








கோல்களைக் கையில் பிடித்து ஆண்களும் பெண்களும் தனித்தனியாகவோ ஒருங்கிணைந்தோ அடித்து ஆடும் ஆட்டம் கோலாட்டம் எனப்படும். கோலாட்டம் அலங்கரிக்கப்பட்ட கோல்களைக் கொண்டு கோலாகலமாக ஆடப்படும் ஆட்டமாகும். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக இது குறிப்பிடப்படுவது குமரி மாவட்ட பகுதிகளில் களியல், களியலாட்டம் எனவும் தஞ்சை மாவட்டப் பகுதிகளில் கிட்டியடித்தல் அல்லது கிட்டியாட்டம் எனவும், ஆண்கள் ஆடும் ஆட்டம் வைந்தானை ஆட்டம் என திருச்சி மாவட்டப் பகுதிகளிலும் ஈழத்தில் வசந்தன் கூத்து என்றும் பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்படுகின்றது. எனினும் கோலாட்டம் என்னும் சொல்லே பரவலாக அறியப்படுகிறது.

கோலாட்டம் உருவானது தொடர்பான பல புராண கதைகள் உள்ளன. பொதுவாக பெண்களுக்கான ஆட்டமாக இருக்கும் கோலாட்டம் தற்பொழுது ஆண் பெண் இருபாலரும் இணைந்து ஆடும் ஆட்டமாக உள்ளது. கோலாட்டத்துக்கென்று பாடல்கள் உள்ளன. தொடக்கத்தில் பொதுவாகத் தொடங்கும் இசையும் ஆட்டமும் பாடலின் முடிவில் துரிதகதியுடன் முடிவுறும். கண்ணன் பிறந்த நாளில் (கிருஷ்ண ஜெயந்தி) அன்று கோலாட்டம் ஆடுவது சடங்கியல் வழக்கமாகப் பல இடங்களில் நிகழ்கின்றது.

கோலாட்டம் பின்னல் கோலாட்டம், கோலாட்டக் கும்மி என மூன்று வகையான கோலாட்டங்கள் தமிழகத்தில் உள்ளன. கோலாட்டத்தில் ஆடுவோரின் எண்ணிக்கை வரையறை எதுவுமில்லை ஆயினும் எட்டு முதல் பன்னிரண்டு பேர் ஆடுவது சிறப்பாக இருக்கும். ஆடுவோரைத் தவிர, பாடுபவர், இசைக்கலைஞர்கள் என எண்ணிக்கை நிகழ்வு இடத்தைப் பொறுத்து மாறுபடும்

ஒத்த வயது மற்றும் உயரம் உள்ளவர்கள் ஒருங்கிணைந்து ஆடுதல் சிறப்பாக இருக்கும் என்ற கருத்தின் காரணமாகத் தொழிற்முறைக் குழுக்கள் தங்களுக்குள் மேற்சொன்னவாறு குழுவாகப் பிரிகின்றனர்.
கோலாட்டத்தில் ஈடுபடுவோர் பெரிய அளவில் ஒப்பனை எதுவும் செய்து கொள்வதில்லை. ஆண்கள் வேட்டி, சட்டை அணிந்தும், தலையில் ரிப்பன் கட்டியும் ஆடுகின்றனர். பெண்களும் வழக்கமான உடையுடன் கோலாட்டம் ஆடுகின்றனர். ஆனால், தொழிற்முறைக் கலைஞர்கள் குழு ஆட்டம் ஆடும் போது ஒரே நிறத்தில் உடையைத் தேர்வு செய்து அணிந்து கோலாட்டம் நிகழ்த்துகின்றனர்.

கோலாட்டம் நிகழ்த்துவதற்கான கோல் அளவாலும், உருவாக்கப்படும் முறையாலும் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றது. தச்சு வேலைப்பாடு உடைய வண்ணம் தீட்டப்பட்ட பித்தளை பூண் மாட்டி மணிகள் கோர்த்து அலங்கரிக்கப்பட்ட கம்புகளுடன் ஆடிய கோலாட்டம் இன்று கிடைக்கும் கம்புகளைக் கொண்டு ஆடப்படுகிறது. சில இடங்களில் இரு கோல்களுக்கும் பதிலாக ஒரு கையில் மட்டும் கோலைக் கொண்டு ஆடும் ஆட்டமும் நிகழ்கின்றது.

கோலாட்டத்தில் இசைக்கருவிகளின் பயன்பாடு அதிகம். ஆனால் இசைக்கருவிகள் கோலாட்டம் நிகழும் இடத்திற்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. ஆர்மோனியம், மத்தளம், ஜால்ரா, பேண்டு வாத்தியம், குந்தளம், தவில் போன்ற இசைக்கருவிகள் பயன்படுகின்றன.

கோலாட்டத்தில் பாடல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதிலும் கண்ணன் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மேலும் இலக்கியப் பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள், கதைப்பாடல்கள், தெம்மாங்கு, பள்ளு, காவடிச்சிந்து, கும்மி, மாரடிப்பாடல், திரையிசைப் பாடல்கள் எனப் பல்வேறு வகைப்பட்ட பாடல்கள் கோலாட்டத்தில் பயன்படுகின்றன.
கோலட்டம்
ஆட்ட அடவுகளில் பல சிக்கலான அடிவைப்பு முறைகள் காணப்பட்டாலும் மின்னல் வேகத்தில் அவர்கள் மாறி மாறித் தடுமாற்றமின்றி ஆடுவது சிறப்பு. பின்னல் கோலாட்டம் என்ற நுட்பமான ஆட்ட வகையும் தமிழகத்தில் உண்டு. இந்த ஆட்டத்தில் உயரத்தில் கட்டப்பட்ட வண்ணத் துணிப் பட்டைகளின் ஒரு நுனி கோலாட்டம் ஆடுபவர் கையில் இருக்கும். ஆட்டக்காரர்கள் ஆடிக் கொண்டே பின்னலைப் போடுவதும் பின்னர் அவர்களே ஆடியவாறு அதனைச் சிக்கல் இல்லாமல் பிரித்து விடுவிப்பதும் இதன் சிறப்பாகும். இதில் சிறு பிழை ஏற்பட்டாலும் பின்னலில் சிக்கல் விழுந்துவிடும் என்பது கவனிக்கத்தக்கது. இவ்வாறு ஆடும் பின்னல் ஆட்டத்தில் இருப்பத்தியொரு பின்னல் கோலாட்ட முறைகள் உள்ளன.
கோலாட்டம் தற்கால நிலையில் அரசு விழாக்கள், பள்ளி, கல்லூரி விழாக்கள் திருவிழாக்கள் எனப் பல்வேறுபட்ட இடங்களில் பலதரப்பு மக்களாலும் விரும்பி ஆடப்படும் ஆட்டமாக அமைந்துள்ளதுஅமைந்துள்ளதுகோலட்டம்

எனது பார்வை..

 சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை பங்குனி மாதம் பங்குனி பொங்கல் முன்னி்ட்டு கொன்னையுர் மாரியம்மன் வேண்டி கோலட்டத்தை இங்கு வைந்தனை என்று அழைக்கபடும் இங்கு ஆண்கள் பெண்கள் என இருவர்களும் ஆடப்படும். வைந்தனை


தேவராட்டம்

கம்பளத்து நாயக்கர் இனத்தைச் சார்ந்த ஆண்கள் ஆடுகின்ற ஆட்டம் தேவராட்டம்எனப்படுகிறது. தேவர்களை வணங்கி ஆடுகின்ற ஆட்டம் என்பதால் தேவராட்டம் எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.


தேவராட்டத்தின் தோற்றம் குறித்த கதை அக்கலைஞர்களிடம் வழக்கில் உள்ளது. இக்கதை தேவராட்டத்தை ஆடும் கம்பளத்து நாயக்கர்களின் ஒரு பிரிவினரான சில்லவார்களுடன் தொடர்புடையது.
கலைக்கோட்டு மாமுனிவரின் மகள் ஆண் உறவின்றி புத்திரப் பேறு வேண்டும் எனத் தந்தையிடம் வரம் கேட்டாள். அவர் அவருக்கு எலுமிச்சம் பழம் ஒன்றைக் கொடுத்தார். அப்பழத்தின் மூலம் ஒரு குழந்தை பிறந்தது. அவர்கள் எலுமிச்சம் பழத்தைக் கண் பழம் என்றும் அழைப்பர். தேவரிஷியின் வம்சத்தில் பிறந்த அக்குழந்தையின் மரபினர் கண்பழத்தார் கம்பழத்தார் எனப் பெற்றனர். இவர்கள் தேவரின் ஆட்டத்தை அறிந்து ஆடினர். இவர்கள் ஆடிய ஆட்டம் தேவராட்டம் ஆனது.
தேவராட்டத்தின் தோற்றம் குறித்த வேறு ஒரு கதையும் உள்ளது. ஏழு உலகங்களையும் படைத்த பின்னர் சிவபெருமானும் பார்வதியும் தேவர் உலகில் வீற்றிருந்தார்கள். அப்போது தேவர் உலகை உருவாக்கிய சிற்பி விஸ்வகர்மா புதிய இசைக் கருவி ஒன்றைப் படைத்தார். அது உடுக்கையைப் போன்று இருந்தது. ஆனால் உடுக்கையைவிட உருவத்தில் பெரிதாக இருந்த அந்த இசைக்கருவியைத் தேவர்களிடம் கொடுத்து இசைக்கும்படி சொன்னார். தேவர்கள் அந்தக் கருவியை தேவதுந்துபிஎன்று அழைத்தனர்.
தேவர்கள் அந்த இசைக் கருவியை இயக்க முயன்றனர் முடியவில்லை. அதை இயக்க யாருமே முன்வராத நிலையில் சிவனுக்கு மாலை கட்டும் பண்டாரம் வந்தார். அவர் சிவனின் கால்களில் வீழ்ந்து வணங்கிவிட்டு தேவதுந்துபியை இயக்கினார். அந்தக் கருவியின் தாளத்திற்கேற்பத் தேவர்களும் ஆடத் தொடங்கினர். அந்த ஆட்டம் தேவராட்டம் எனப் பெயர் பெற்றது.
தமிழகத்தில் திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம் முதலான கம்பளத்து நாயக்கர்கள் வாழும் பகுதிகளில் இந்த நிகழ்த்துக் கலை அதிகமாகக் காணப்படுகிறது.


தேவராட்டத்தில் எட்டு முதல் பதின்மூன்று பேர் ஆடவேண்டும் என்பது பொது மரபாக இருந்தாலும் ஆடுவோர் எண்ணிக்கையில் கட்டுப்பாடு இல்லை. நூறு பேர் கூட ஒரே சமயத்தில் ஆடலாம். இந்த ஆட்டத்தின் போது ஆண்கள் ஒப்பனை செய்து கொள்வதிலை. அண்மைக் காலமாக இக்கலை மேடையில் நிகழ்த்தப்படுகிறது. அச்சமயத்தில் ஆடுபவர்கள் ஒரே வண்ணத்தில் ஆடை அணியும் போக்குக் காணப்படுகிறது.
இடையில் சாதாரணமாக உடுத்தும் வேட்டி, கைகளில் சிறிய துணி, கால்களில் சலங்கை, தலையில் தலைப்பாகை, சலங்கை மணிகளை நீளமாக நூலில் கோத்துக் காலில் கட்டிக் கொள்கின்றனர்.
இவ்வாட்டத்தில் பாடல்கள் பாடப்படுவதில்லை. இசைக்குத் தகுந்தாற்போல் ஆடும் ஆட்டமாக உள்ளது. உறுமி என்னும் இசைக் கருவி இந்த ஆட்டத்தின் போது இசைக்கப்படுகிறது. இதனைத் தேவதுந்துமிஎன்று கம்பளத்து நாயக்கர் அழைப்பர். இக்கருவி வேங்கை மரத்தில் செய்யப்படுகிறது. நடுவில் குறுகியும் ஓரங்களில் பருத்தும் காணப்படும். ஆட்டிக்குட்டியின் தோலைப் பயன்படுத்தி இக்கருவியை உருவாக்குகின்றனர். இடப்பக்கத் தோலில் வளைந்த நொச்சி குச்சியை அழுத்தி இழுத்து ஓசை எழுப்புவர். வலப்பக்கத் தோலில் வளைந்த விராலி அல்லது புரசன் குச்சியைப் பயன்படுத்தி அடித்து ஒலி எழுப்புவர். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாலாஎன்னும் பிரிவினர் இக்கருவியை இசைக்கின்றனர்.
இவ்வாட்டத்தின் ஆடுகளம் சூழலுக்கேற்ப அமைகிறது. தேவராட்டத்தில் பயிற்சி பெற்ற ஒருவர் தலைமை ஏற்று ஆடுவார். மற்றவர்கள் அவர் உடலசைவுகளைக் கவனித்து அவனைப் பின்பற்றி ஆடுவார்கள். தேவராட்டத்தில் இருபத்தி மூன்று ஆட்டங்கள் உள்ளதாகக் கூறுவர். நிலுடிஜம்ப்பம், சிக்கு ஜம்ப்பம் என்பன போன்ற பெயர்களால் ஆட்டங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஒவ்வொரு வகையான ஆட்டத்திற்கும் உறுமி மேளத்தில் இசைக்கப்படும் தாளக்கட்டுக்கள் மாற்றமடைகின்றன. பெண்கள் பார்வையாளர்களாக மட்டுமே இருக்கமுடியும்.

தேவராட்டத்தில் பதினெட்டு அடவுகள் உள்ளன. இவற்றை அடிப்படை அடவுகள் என்று கூறலாம். அடிப்படை அடவுகளை நான்கு நிலைகளில் வேறுபடுத்துவதன் மூலம் 72 அடவுகளை உருவாக்க இயலும். இந்த 72 அடவுகளும் ஆறு சப்தக் கூறுகளை உடையவை. ஒவ்வொரு அடவும் தனித்தனியே ஆடப்படும் போது இந்த ஆறு ஒலிக் கூறுகள் மட்டுமே மறுபடியும் மறுபடியும் இசைக்கப்படுகின்றன. இவ்வாறு ஆடப்படும் அடவுகள் இணைந்தே தேவராட்டமாக உருப்பெறுகிறது. இக்கலையின் அடிப்படை அடவுகள் பதினெட்டும் கட்டாயமாக ஆடப்பட வேண்டும் என்ற நியதி உள்ளது.
ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு இடம் பெயர்ந்து வந்த கம்பளத்து நாயக்கர்களின் இனக்குழு ஆட்டமாகத் தேவராட்டம் கருதப்படுவதால் இக்கலை ஆந்திராலிருந்து தமிழகத்திற்கு வந்ததாகக் கருதலாம். இந்த ஆட்டத்தைப் பிற சாதியைச் சார்ந்தவர்கள் பெரும்பாலும் ஆடுவதில்லை. கர்நாடகத்திலிருந்து தமிழகத்தில் குடியேறிய ஒக்கலிகள், குறும்பைக் கவுண்டர் ஆகிய சமுகத்தவரிடையேயும் இக்கலையைக் காணமுடிகிறது. ஆந்திரத்தைச் சார்ந்தவர்கள் தேவுடு ஆட்டம்என்று தேவராட்டத்தைக் குறிப்பிடுவர்.

கம்பளத்து நாயக்கர்களின் வாழ்வியல் சடங்குகளிலும் வழிபாட்டுச் சடங்குகளிலும் தேவராட்டம் முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. பூப்புச் சடங்கில் பதினாறாம் நாள் பெண்ணை மந்தைக்கு அழைத்துச் சென்று சடங்குகளைச் செய்து விட்டு வீட்டிற்கு வருகையில் தேவராட்டம் ஆடப்படுகிறது. மணமகனைக் குதிரையில் வைத்து திருமண ஊர்வலமாக அழைத்துச் செல்லும் போது தேவராட்டம் ஆடப்படுகிறது. மணப் பெண் சில சடங்களைச் செய்து முடித்து விட்டு வீடு திரும்பும் போது இவ்வாட்டம் ஆடப்படுகிறது. இறப்பு நிகழ்வில் பதினாறாம் நாள் மந்தையிலிருந்து வீடு திரும்பும் போது இக்கலையை நிகழ்த்துகின்றனர்.
ஆடி மற்றும் புரட்டாசி மாத வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் சக்கம்மா வழிபாட்டின் போது தேவராட்டம் நிகழ்த்தப்படுகிறது. வீரபாண்டியிலுள்ள கௌமாரியம்மன் சித்திரைத் திருவிழாவில் ஐந்தாம் நாளன்று இரவில் பல ஊர்களைச் சார்ந்த கம்பளத்து நாயக்கர்களும் வந்து தேவராட்டம் ஆடுவர்.

பொய்க்கால் குதிரை


புராணக் கதைகளைப் பொய்க்கால் குதிரை ஆட்டத்தின் மூலம் நடித்துக் காட்டுவதுண்டு தஞ்சையை ஆண்ட மராட்டியர்களால் இக்கலை சிறப்புற்றது. ஆணும், பெண்ணும் பங்கேற்கும் இவ்வாட்டத்தில் ஆண் அரசர் வேடந்தாங்கியும், பெண் அரசி வேடந்தாங்கியும் ஆடுவர்.

கேரளா நாட்டு கதகளி பஞ்சாபி நாட்டுக் கதை ஆகியவற்றின் நடனக் கூறுகள் பொய்க்கால் குதிரை ஆட்டத்தில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

உறியடி விளையாட்டு



உறியடி என்பது ஒரு கிராமியக் கலையாகக் கருதப்படுகிறது. உறியடி விழா என்பதும் கோவில் சார்ந்த கலையாகக் கருதப்படுகிறது. உறி 10 அல்லது 15 அடி உயரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கும். உறியை அடிப்பவர் மூன்று அடி நீளமுள்ள கம்புடன் காத்திருப்பர்.

தெரு குத்து

பிறநாட்டுப்புறக் கலைகளைப் போன்றே இதுவும் தெய்வ வழிப்பாட்டோடு தொடர்பு உடையது. திரௌபதி விழாக்களில், மாரியம்மன் விழாக்களில், சிவன், திருமால், கணேசன், ஆகியோருக்கு எடுக்கப்படும் விழாக்களில் தெரு கூத்தானது நிகழ்த்தப்பட்டு வருகிறது.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நாற்பது கூத்து குழுக்கள் உள்ளன. தெரு கூத்து பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாறுபட்டு நிகழ்த்தப்படுகிறது. தெருகூத்தில வரும் கதாபாத்திரங்களின் பண்புகளை வண்ணங்களும் ஒப்பனையும் வெளிப்படுத்தும், துரியோதனனுக்கு சிவப்பும், துச்சாதனுக்கு மஞ்சள், பீமனுக்கு மேகவண்ணமும், கிருஷ்ணனுக்கு பச்சையும், திரௌபதிக்கு இளஞ்சிவப்பும், அர்ச்சுனனுக்கு நீலமும் தீட்டுவர்.

தெருக்கூத்தில் முதன் முதலாக அரங்கினுள் நுழையும் பாத்திரம் கட்டியக்காரன் ஆவான். அவன் கூத்தின் நடுநாயகமான பாத்திரமாகி, அரசனைப் புகழ்பவனாகவும், தூதுவனாகவும், வேலைக்காரனகவும், கோமாளியாகவும், பொது மக்களுள் ஒருவனாகவும், மாறிமாறிப் பாடுவான். கூத்தைத் துவக்கி, காட்சிகளை விளக்கி கதைகளைத் தெரியப்படுத்தி அறிவுரைகளை தூவி, காலநேரச் சூழல்களை முறைப்படுத்தி வாழ்த்துக் கூறுவதுடன் கூத்தை முடிக்கும் பல வேலைகளையும் செய்கின்றவனாக கட்டியக்காரன் தெருக்கூத்தில் இடம் பெறுகிறான். கூத்தின் இறுதிக்கட்டம் பொது வசனம், முடிவுப்பாட்டு, மங்களம் பாடுவதோடு முடியும். தெரு கூத்தானது இவ்வாறு அனைத்து நாட்டுப்புற கலைகளுக்குச் சிறப்பசெய்வதனை காணலாம்.

வில்லுப்பாட்டு

இக்கலை பத்து நூற்றாண்டுகளுக்கும் மேற்பட்ட பழமைவாய்ந்தது. தமிழகத்தின் தென்மாவட்டங்களான குமரி,நெல்லை மாவட்டங்களில் ' வில்லிசை 'அல்லது 'வில்லுப்பாட்டு ' மிகப் புகழ்பெற்ற கலையாக உள்ளது. சிற்றூர்களில் உள்ள தெய்வங்களுக்கு வழிபாடு நடத்திக்' கொடை விழா ' எடுக்கும்போது தெய்வங்களின் வரலாறுகள், தெய்வநிலை பெற்ற வீரர்களின் வரலாறுகள் ஆகியவற்றை மக்களிடம் எடுத்துச் சொல்ல இக்கலை பெரிதும் பயன்படுகிறது.

வில்லை முதன்மைக் கருவியாகவும், உடுக்கு, குடம், தாளம், கட்டை ஆகியவற்றைத் துணைக்கருவிகளாகவும் கொண்டு இக்கலை நடத்தப்படுகிறது. இந்த இசைக்குழுவின் முதல்வராக அமர்ந்து கதைபாடுபவர் ' புலவர் ' எனப்படுவார். அவர் கதை சொல்வதிலும், பாட்டுப் பாடுவதிலும், நடிப்பதிலும், காலத்திற்குத் தக்க அரசியல், பொருளாதார, சமூக அடிப்படையிலான் நகைச்சுவைத்துணுக்குகள் சொல்வதிலும் வல்லவராக இருப்பார். மரபு வழியிலமைந்த தென்மாவட்ட வில்லுப்பாட்டுகளில் புகழ் பெற்றது ' ஐயன் கதை ' எனப்படும் ' சாஸ்தா கதை ' யாகும். இதிகாசம், புராணம் தொடர்பான கதைகள், சமூகப் பாங்கான கதைகள் எனப் பல கதைகள் இன்றும் குமரிமாவட்ட சிறுகோயில்களில் வில்லிசை நடைபெறுவதைக் காணலாம்.

No comments:

Post a Comment

ராவத்தாள

ராவத்தாள் நெற்குப்பையில் மாசி மாதம் கொண்டபடும் திருவிழா ராவத்தாள் இதனை கும்மியாட்டம் என்று அழைப்பார் . மாசி மாதம் மாசிமகம் ...